திண்டுக்கல்: நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, சேத்தூர் ஊராட்சி சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து களமிறங்கினர்.
முன்னதாக இன்று காலையில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காலை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. திமிலை உயர்த்தி தீரம் காட்டிய காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
சில காளைகள் யாருக்கும் பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பித்தளை குத்துவிளக்கு, சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா, ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஏராளமான கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.
The post திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.