மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

5 hours ago 2

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி இன்று அளித்த பேட்டி : இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதலை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பேரணி அறிவித்துள்ளார். இந்த பேரணியில் விசிக கட்சி சார்பில் நாங்கள் பங்கேற்க இருக்கிறோம். பயங்கரவாதம் துடைத்தெறியப்பட வேண்டும். காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது.

இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடத்தும் பேரணி அமைந்துள்ளது. பேரணியில் கட்சி அடையாளங்கள் இன்றி பொதுமக்களாக அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தற்போது ஒரே அணி தான் உள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டும்தான். எதிர்க்கட்சிகள் இன்னும் ஓரணியாக வடிவம் பெறவில்லை. அதிமுக கூட்டணி உறுதி பெறவில்லை.

கூட்டணி அமைத்துக் கொண்டதாக சொன்னாலும் அது இன்னும் உறுதி பெறவில்லை. அந்த அணியில் வேறு யார், யார் பங்கேற்க போகிறார்கள் என்று இன்னும் உறுதிப்படவில்லை. இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான். மண்ணின் மைந்தர்கள் தான். இஸ்லாமியர்களும இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை வரவேற்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல், சமூக பிரிவினை வாதம் கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article