மண்ணடி காளிகாம்பாள் கோயிலுக்கு புதிய வெள்ளி தேருக்கு கூடுதலாக 90 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

1 month ago 5

சென்னை: சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் புதிய வெள்ளித்தேர் செய்ய வெள்ளித் தகடு வேயும் பணிகளுக்கு உபயதாரரால் வழங்கப்பட்ட 90 கிலோ வெள்ளிக் கட்டிகளை கோயில் நிர்வாகத்திடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிற 68 தங்கத்தேர்கள் மற்றும் 55 வெள்ளித்தேர்களில் 15க்கு மேற்பட்ட கோயில்களில் செயலற்று இருந்த வெள்ளி மற்றும் தங்கத் தேர்களை ஓடவைத்துள்ளோம்.
11 ஆண்டுகள் ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் தங்கத்தேர், 10 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சமயபுரம் தங்கத்தேர், 9 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சேலம் கோட்டை மாரியம்மன் தங்கத்தேர், 5 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருத்தணி தங்கத்தேர் போன்றவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் உலா வரச் செய்துள்ளோம்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின், ரூ.29 கோடி மதிப்பீட்டில் 5 தங்கத்தேர்கள் மற்றும் ரூ.27.16 கோடி மதிப்பீட்டில் 9 வெள்ளித்தேர்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதில் பெரியபாளையம் தங்கத்தேர் மற்றும் திருத்தணி வெள்ளித்தேர் பணிகள் நிறைவுபெற்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பயன்பாட்டில் உள்ளது. இதர வெள்ளித்தேர்களில் காளிகாம்பாள் கோயில் வெள்ளித் தேரும் ஒன்றாகும். இத்தேர் செய்ய ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு ரூ.12 லட்சம் செலவில் மரத்தேர் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த மரத்தேருக்கு வெள்ளித்தகடு வேயும் பணிக்கு 277 கிலோ 530 கிராம் அளவுள்ள வெள்ளி தேவைப்படுகிறது. அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோயில் மற்றும் உபயதாரர் மூலம் 133 கிலோ வெள்ளிக் கட்டிகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இன்றைய தினம் 90 கிலோ வெள்ளிக் கட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வெள்ளித் தேருக்கு தேவைப்படும் வெள்ளிக் கட்டிகளை வழங்குவதற்கு உபயதாரர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த புதிய வெள்ளித் தேரின் பணிகள் முழுமையாக நிறைவுற்று முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 அன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர்கள் வான்மதி, ஜ.முல்லை, உதவி ஆணையர் சிவகுமார், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள், கோயில் சிவாச்சாரியார் காளிதாஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post மண்ணடி காளிகாம்பாள் கோயிலுக்கு புதிய வெள்ளி தேருக்கு கூடுதலாக 90 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article