மண் கடத்தல் லாரியில் சிக்கி 2 நாய்கள் பலி டிரைவருக்கு தர்ம அடி பொன்னை அருகே

1 day ago 2

 

பொன்னை, மே 10: பொன்னை அருகே முரம்பு மண் கடத்திய லாரியில் சிக்கி 2 தெருநாய்கள் பரிதாபமான இறந்தன. இதனால் லாரி டிரைவருக்கு தர்மஅடி விழுந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டம், பொன்னை, வள்ளிமலை, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிலர் சட்ட விரோதமாக டிப்பர் லாரிகளில் முரம்பு மண் கடத்தி வருகின்றனர். அதேபோல், நேற்று காலை பொன்னை அடுத்த சோமநாதபுரம் வழியாக டிப்பர் லாரியில் முரம்பு மண்ணை கடத்திச்சென்றவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் நடமாடும் பகுதியில் லாரியை தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார்.
இதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து சாலையோரம் படுத்திருந்த 2 தெருநாய்கள் மீது லாரி ஏறி இறங்கியதில் அவை பரிதாபமாக பலியாகின. உடனே பொதுமக்கள் லாரியை நிறுத்தும்படி கூறினர். ஆனால் டிரைவர் கண்டுகொள்ளாமல் லாரி வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார்.
இதையடுத்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் லாரியை விரட்டிச்சென்று கோட்டை நத்தம் பகுதியில் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post மண் கடத்தல் லாரியில் சிக்கி 2 நாய்கள் பலி டிரைவருக்கு தர்ம அடி பொன்னை அருகே appeared first on Dinakaran.

Read Entire Article