மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்

1 month ago 4

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பாஜ தலைவர் ஜேபி நட்டா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு காங்கிரஸ் 4 கேள்வி கேட்டு பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த சில தினங்களுக்கு முன் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசும், ஒன்றிய அரசும் தோல்வியடைந்துள்ளன. நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடியாக பாஜ தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜேபி நட்டா, கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதம் விவரம் வருமாறு: மணிப்பூரில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் அரசியல் செய்கிறது. மணிப்பூரில் ஆட்சியில் இருந்தபோது உள்ளூர் பிரச்னைகளைக் கையாள்வதில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியின் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. மணிப்பூரில் உள்ள சூழ்நிலையை பரபரப்பாக்க காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிற்கு வெளிநாட்டு போராளிகள் சட்டவிரோதமாக குடியேறுவதை காங்கிரஸ் அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியது மட்டுமல்லாமல், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதையும் கார்கே மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதை எந்த வகையிலும் அனுமதிக்காது. ஆரம்பத்தில் இருந்தே மணிப்பூரில் அமைதியை உறுதிப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி , மணிப்பூர் வரலாற்றில் ரத்தக்களரி காலங்கள் என்பதை கார்கே மறந்து விடக்கூடாது. 1990களில் நடந்த அந்த கருப்பு காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இந்த தோல்வியை காங்கிரஸ் மறக்கக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபி நட்டாவுக்கு பதிலடியாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,’ காங்கிரஸ் தலைவர் கார்கே, மணிப்பூர் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை எதிர்கொள்ளும் வகையில், பாஜ தலைவர் தற்போது காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். நட்டாவின் கடிதம், பொய்கள் நிறைந்தது. அதில் 4டி பயிற்சி உள்ளது. அதாவது மறுப்பு, திரித்தல், கவனச்சிதறல், அவதூறு ஆகியவை இடம்பெற்றதில் ஆச்சர்யம் இல்லை. மணிப்பூர் மக்கள் இயல்பு நிலை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக ஏங்குகிறார்கள்.

இந்த நோக்கத்திற்காக அவர்கள் நான்கு எளிய கேள்விகளைக் கேட்கிறார்கள்: பிரதமர் எப்போது மாநிலத்திற்கு வருவார்? பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக இல்லாத நிலையில், முதல்வர் இன்னும் எவ்வளவு காலம் பதவியில் நீடிப்பார்? மணிப்பூருக்கு எப்போது முழு நேர கவர்னர் நியமிக்கப்படுவார்? மணிப்பூரில் ஏற்பட்ட மோசமான தோல்விகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் எப்போது பொறுப்பேற்பார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article