மணிப்பூர் வன்முறை; 3 முக்கிய வழக்குகள் மீது என்.ஐ.ஏ. விசாரணை

2 hours ago 1

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக பரவியது. இந்த சம்பவத்தில், இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று முற்றுகையிட முயற்சித்தது. அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

இதனை தொடர்ந்து அவருடைய வீட்டை சுற்றி இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வீடுகளை முற்றுகையிட்டு, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 23 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், அடுத்த உத்தரவு வரும் வரை இம்பால் மாவட்டம் முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக, 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் வழியேயான இணையதள சேவைகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளன.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால், பல்வேறு இடங்களிலும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஸ்திரத்தன்மையற்ற சூழல் காணப்படும் நிலையில், மணிப்பூர் போலீசாரிடம் இருந்து 3 வழக்குகள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதன்படி, 3 முக்கிய வழக்குகள் மீது என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ளும்.

கடந்த 16-ந்தேதி அறிக்கை ஒன்றின் வழியே மத்திய உள்துறை அமைச்சகம் இதனை தெரிவித்தது. மணிப்பூரில் வன்முறை தொடர்ச்சியாக, மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் கம்பெனி படைகள் செல்லும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த 3 வழக்குகளில் ஒரு வழக்கின்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் குகி பயங்கரவாதிகளுக்கு இடையே ஜிரிபாம் பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 10 குகி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோன்று 6 பேர் கடத்தல் பற்றிய தனி வழக்கு ஒன்றும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த 6 பேரும் கடத்தப்பட்ட பின்னர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. வன்முறை பரவ முக்கிய காரணங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

மணிப்பூர் வன்முறை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நேற்று உயர்மட்ட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிலையில், வன்முறை விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள அமித்ஷா தலைமையில் இன்றும் உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Read Entire Article