
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ஜமால்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுமி நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 38 வயதான ஜஸ்வீர் சிங் என்பவர் பள்ளிக்கு காரில் அழைத்து செல்வதாக சிறுமியிடம் கூறியுள்ளார். ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறுமி ஜஸ்வீர் சிங்கின் காரில் ஏறியுள்ளார். காரில் வைத்து சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை ஜஸ்வீர் சிங் கொடுத்துள்ளார். அதை குடித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து பள்ளிக்கு அருகே ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு காரை ஓட்டி சென்ற ஜஸ்வீர் சிங் மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை அப்பகுதியிலேயே விட்டுவிட்டு காரில் ஜஸ்வீர் சிங் சென்றுள்ளார்.
பள்ளி சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் மாலை நேரத்தில் பள்ளி அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை எழுப்பி நடந்த விவரம் குறித்து கேட்டார். அப்போது, மயக்க மருந்து கொடுத்து ஜஸ்வீர் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாயிடம் சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஜஸ்வீர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.