புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரின் இம்பால் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு மற்றும் இணைய சேவை இடைநிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் காலடி எடுத்து வைக்காத பிரதமர் மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"உங்கள் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் கீழ், மணிப்பூர் ஒன்றாகவும் இல்லை, பாதுகாப்பாகவும் இல்லை. கடந்த 2023 மே மாதம் முதல் நீடித்து வரும் கற்பனை செய்ய முடியாத வலியும், பிரிவினையும், வன்முறையும் மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.
தனது வெறுப்பூட்டும் பிளவுவாத அரசியலுக்கு உதவிகரமாக இருப்பதால், வேண்டுமென்றே மணிப்பூர் எரிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த 7-ந்தேதி முதல் மணிப்பூரில் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையோர வடகிழக்கு மாநிலங்களுக்கும் வன்முறை பரவி வருகிறது.
அழகான எல்லை மாநிலமான மணிப்பூரை பிரதமர் மோடி கைவிட்டு விட்டார். இனி எதிர்காலத்தில் மோடி மணிப்பூருக்குச் சென்றாலும், துயரமான நேரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண தங்கள் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்காத மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.