
சுராசந்த்பூர்,
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது மணிப்பூரில் கலவரம் ஏற்படுகிறது. இந்த சூழலில், கிராமத்தினர் சிலர் கும்பலாக சென்று போலீசாரிடம் இருந்த ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றனர். அவற்றை திரும்ப ஒப்படைக்க அரசு கேட்டு கொண்டது.
ஆனால், அதில் பலனில்லை. இந்நிலையில், மணிப்பூரின் கவர்னர் அஜய் குமார் பல்லா வெளியிட்ட அறிவிப்பில், போலீசாரிடம் இருந்து கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத வகையில் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை, அனைத்து சமூக உறுப்பினர்களும் 7 நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
அப்படி ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அசாம் ரைபிள் படையினர், போலீசார், சி.ஆர்.பி.எப். மற்றும் மாநில நிர்வாகம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்டோர் மணிப்பூரில் உள்ள ஜோமி மற்றும் குகி சமூக தலைவர்களை நேரில் அழைத்து பேசினர்.
அவர்களுடைய பாதுகாப்பு பற்றி கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான உறுதிமொழியையும் அளித்தனர். ஆயுதங்கள் ஒழிப்பால் ஏற்படும் நேர்மறை தாக்கம் பற்றியும் அவர்களிடம் விளக்கி கூறினர்.
இந்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டு உள்ளது. சமூக தலைவர்கள் பலர் பெருமளவிலான ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு முன்வந்தனர். இதன்படி, இரு சமூகத்திலும் இருந்து மொத்தம் 16 ஆயுதங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால், மணிப்பூரில் மோதலுக்கு முடிவு ஏற்பட்டு, அமைதியை கொண்டு வரும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.