‘மணிப்பூருக்கு மட்டும் மோடி செல்லாத மர்மம் என்ன’ பாஜ, ஆர்எஸ்எஸ்தான் அமைதியை சீர்குலைக்கிறது: செல்வபெருந்தகை குற்றச்சாட்டு

1 month ago 5

நாகர்கோவில்: ‘எல்லா மாநிலங்களிலும் அமைதியை பாஜ, ஆர்எஸ்எஸ் சீர்குலைக்கிறது’ என்று செல்வபெருந்தகை தெரிவித்தார். இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்தும், அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் செல்வபெருந்தகை அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும். 2004 முதல் 2014 வரை தேசிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம். இது காங்கிரஸ் பார்முலா. கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம், அவரது கருத்தை சொல்லலாம். பா.ஜ கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டு தான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏன் மணிப்பூருக்கு மட்டும் அவர் செல்லவில்லை. இது மர்மமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அணு கனிம சுரங்க திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நேற்று காலை குமரி மாவட்டம் வந்தார். பின்னர் கலெக்டர் அழகுமீனா தலைமையில் இரையுமன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செல்வபெருந்தகை கூறுகையில், அணு கனிம சுரங்க திட்டத்தில் மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை கூட இருக்கிறது. அப்போது இதனை ஒத்தி வைப்பு தீர்மானமாக வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாழ்வாதார பிரச்னைகள் பற்றி விவாதிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

The post ‘மணிப்பூருக்கு மட்டும் மோடி செல்லாத மர்மம் என்ன’ பாஜ, ஆர்எஸ்எஸ்தான் அமைதியை சீர்குலைக்கிறது: செல்வபெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article