மணிப்பூரில் பகுதிநேர ஆளுநர், தோல்வியுற்ற முதல்வர்: ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

19 hours ago 2

புதுடெல்லி: மணிப்பூர் ஆளுநர் ஒரு பகுதிநேர ஆளுநர், தோல்வியுற்ற முதல்வர் மற்றும் மிகவும் தோல்வியுற்ற உள்துறை அமைச்சர்” என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி வெடித்த இனக்கலவரம் முடிவுக்கு வரவில்லை என்றாலும் சிறிது காலம் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. வன்முறை ஏற்பட்டு ஓராண்டை கடந்தும் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தொடர் கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்நிலையில் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மணிப்பூரில் பழங்குடியின தலைவரான ஆளுநர் அனுசுயா உகேவின் பதவிக்காலம் 18 மாதங்களுக்கும் குறைவாக குறைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 31 முதல் மணிப்பூருக்கு முழுநேர ஆளுநர் இல்லை. தற்போதைய ஆளுநரும் பெரும்பாலான நேரத்தை அசாமில் செலவிடுகிறார். பலமுறை வலியுறுத்தியும் பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை. இவர்களை விட மணிப்பூர் மக்கள் அனைத்து வகையிலும் தகுதியானவர்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

* கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் குவிப்பு
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய ஆயுத படையை சேர்ந்த 11கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணிக்காக மணிப்பூர் வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் மத்திய ஆயுத காவல் படையின் 8 கம்பெனி போலீசார் இம்பால் வந்தடைந்தனர்.

மேலும் சிஆர்பிஎப் மற்றும் பிஎஸ்எப் தலா 4 கம்பெனி வீரர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய ஆயுத காவல் படையின் மேலும் 50 கம்பெனி போலீசாரை மணிப்பூர் பாதுகாப்பு பணிக்காக ஒன்றிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post மணிப்பூரில் பகுதிநேர ஆளுநர், தோல்வியுற்ற முதல்வர்: ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article