மணலி மண்டலத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

3 hours ago 1

திருவொற்றியூர்: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக்கொள்ள வேண்டும், ஆபத்தில் இருப்பவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட சடையங்குப்பம், சுப்பிரமணியம் நகர் பகுதிகளில் பகுதிகளில் நடைபெற்றது. மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டரவி தேஜா, உதவி பொறியாளர் (பொறுப்பு) தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.

தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று மழை வெள்ளத்தின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும், ஆபத்தில் இருக்கும்போது தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது குறித்து செய்முறை ஒத்திகை மூலம் ஒத்திகை செய்து காண்பித்தனர்.

நீரில் அடித்துச்செல்பவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று காப்பாற்றி அழைத்து வந்து அவர்களுக்கு முதலுதவி செய்வது, கட்டிடத்தின் மேலே சிக்கி இருப்பவர்களை கயிறு மூலம் பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வந்து பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பது, சாலைகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றால் கயிறு கட்டி அதில் இருந்து எப்படி வெளியேறுவது குறித்து செய்முறை விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.

பேரிடர் மீட்புபணியின் போது பயன்படுத்தக்கூடிய நவீன கருவிகளையும் அதனால் ஏற்படும் பயன்களையும் விளக்கினர். இதையடுத்து பாலசுப்பிரமணியம் நகரில் ஒத்திகை பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர்கள் காசிநாதன், ராஜேந்திரன் ஆகியோர் பெட்ஷீட் பாய், பிரட், பிஸ்கட் ஆகிய உதவி பொருட்களையும் வழங்கினர்.

The post மணலி மண்டலத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article