மஞ்சூர், ஜூன் 23: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் இடை விடாமல் வீசும் சூறாவளி காற்றால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மழை மற்றும் சூறாவளி காற்றின் தாக்கம் முற்றிலுமாக நின்று போன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பலத்த மழை பெய்தநிலையில் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதை தொடர்ந்து சமீப நாட்கள் வரை சகஜநிலை ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. முன்தினம் இரவு விடிய, விடிய சூறாவளி காற்று வீசிய நிலையில் நேற்றும் பகல் முழுவதும் தொடர்ந்தது. இதனால் பகல் நேரத்திலும் கடும் குளிர் ஏற்பட்ட நிலையில் கடைவீதி, பஜார் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.
The post மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்றால் குறைந்த பொது மக்கள் நடமாட்டம் appeared first on Dinakaran.