மக்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற அரசு, சட்டமன்றம், நீதித்துறை இணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

1 month ago 3

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு உரையுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்தவிழாவில் துணை ஜனாதிபதி ெஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதாவது: கடந்த சில ஆண்டுகளில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் அரசாங்கம் பல பணிகளைச் செய்துள்ளது. ஏழை மக்களுக்கு இப்போது சுகாதாரம், வீடு மற்றும் உணவு தொடர்பான பாதுகாப்பு கிடைத்துள்ளது.

பெண்கள் இடஒதுக்கீடு குறித்த சட்டம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு ஒரு முற்போக்கு ஆவணம். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசியலமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாமானியர்களின் வாழ்க்கை மேம்படுத்த அரசு, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது அவசியம். அரசியலமைப்பு இந்தியாவின் ஜனநாயக குடியரசின் வலுவான அடித்தளம். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

அத்துமீற முயற்சிக்கவில்லை: மோடி
உச்ச நீதிமன்றத்தில் நடந்த அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் கபில் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,’ இந்தியா ஒரு மாற்றத்தின் காலகட்டத்தை கடந்து வருகிறது. இதுபோன்ற முக்கியமான நேரத்தில், இந்திய அரசியலமைப்பு எங்களுக்கு வழியைக் காட்டுகிறது. நமக்கு வழிகாட்டும் ஒளியாக உள்ளது. இந்தியர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

இதற்காக புதிய நீதித்துறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தண்டனை அடிப்படையிலான முறை இப்போது நீதி அடிப்படையிலான அமைப்புக்கு மாறியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கிய பணியின் எல்லைக்குள் இருக்க முயற்சித்தேன். எந்த அத்துமீறலுக்கும் நான் முயற்சிக்கவில்லை. எனது எல்லைக்குள் எனது கருத்துக்களை முன்வைக்க முயற்சித்தேன். இங்கே ஒரு குறிப்பு மட்டும் போதும். அதிகம் சொல்ல வேண்டியதில்லை’ என்றார்.

The post மக்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற அரசு, சட்டமன்றம், நீதித்துறை இணைந்து செயல்பட வேண்டும்: ஜனாதிபதி அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article