சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய், தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக. மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.
இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல். எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று. நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது மக்களரசியல் மட்டுமே.
கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர். தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளுங்கள்: தவெக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.