சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை 25.57 லட்சம் பேர் எழுத உள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழ்நாட்டில் 12,11,10 வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மூன்றாம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வு பணிகளை கண்காணிக்க 4 470 பறக்கும் படைகளும் 43,446 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடைபெறுகிறது. இவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 15 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 7557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வினை கண்காணிக்கும் படியில் 4470 பறக்கும் படையினரும் 44,236 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை 12, 480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்ர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும்,48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி, 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பூவிருந்தவல்லி பார்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொது தேர்வினை கணினி வழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளோம். இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார். வருங்காலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வினை எழுத இந்த நிகழ்வு முன் மாதிரியாக விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு; 25.57 லட்சம் பேர் எழுதுகின்றனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.