சென்னை: மக்கள் சேவையில் மட்டுமல்ல, விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாடு என்சிசி இளைஞர்கள் தொடந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். சென்னை கலைவாணர் அரங்கில், டெல்லி அகில இந்திய குடியரசு தின என்.சி.சி. முகாமில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பரிசுகளையும், தமிழ்நாடு அளவில் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர் குழும தலைமையகத்திற்கு முதல்வர் பதாகையையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக என்.சி.சி. மாணவ, மாணவிகள் அமைத்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் அகில இந்திய, சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன ரக துப்பாக்கியின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் விதைப்பந்துகள் மூலம் மலைப்பகுதியில் பசுமைப்பரப்பை அதிகரிக்க செய்யும் வகையில் தேசிய மாணவர் படையின் சமூகப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தன்னலம் பாராமல் என்சிசி மாணவர்கள் செய்யும் சேவைகள் போற்றத்தக்கவை. மக்கள் சேவையில் மட்டுமல்ல, விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாடு என்சிசி இளைஞர்கள் தொடந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற TamilNadu 49th State Shooting Championship போட்டியில் 14 தங்கம், 19 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்கள்.
அதற்கும், இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தேசிய மாணவர் படையின் துணை டைரக்டர் ஜெனரல் கமோடர் எஸ்.ராகவ், இயக்குநர் கர்னல் வக்கீல் குமார், குரூப் கேப்டன் பிரபு மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் சேவையில் மட்டுமல்ல, விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாட்டு என்சிசி மாணவர்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.