
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இப்போது மிக வேகமாக புலிப்பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கிறது. இதில் அனைத்து துறைகளுக்கும் சொல்லமுடியாத அளவில் பலன் கிடைப்பதால் இதன் ஆக்கிரமிப்பு எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. இப்போது சிறிய மளிகைக் கடைகளில் கூட டிஜிட்டல் முறையில் பணம் வாங்குவது, வாட்ஸ் அப் செயலி மூலம் ஆர்டர் பெறுவது என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. இவ்வளவு ஏன் தெருவோர கடைகளில் கூட யு.பி.ஐ. பரிமாற்றமே கோலோச்சிக்கொண்டு இருக்கிறது. அதுபோல பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூடியூப் என்று அனைத்து சமூக ஊடகங்களும் ஒவ்வொரு வீட்டிலும் சிறிய குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் முக்கியமான பயன்பாடாகிவிட்டது. இப்போது புதிய வரவாக ஏ.ஐ. தொழில்நுட்பம் என்ற செயற்கை நுண்ணறிவும் நுழைந்து இதோடு இணைந்துவிட்டது.
இந்த செயற்கை நுண்ணறிவின் ஊடுருவல் மிக வேகமாகிவிட்டது. இந்த துறை, அந்த துறை என்று இல்லாமல் அனைத்து துறைகளிலும் இதை வைத்தே தங்கள் செயல்பாட்டை வகுத்துக்கொள்கின்றன. குறிப்பாக மருத்துவ துறையில் இதன் பங்கு மகத்தானது. சமூக ஊடகங்களின் முதல் பணி மக்களை மகிழ்விப்பதுதான். அந்தவகையில், கார்ட்டூன் படங்களை பார்த்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிப்பது போல இப்போது எல்லோரையும் சிந்தித்து, சிரித்து மகிழ்விக்க ஜிப்லி கார்ட்டூன் வந்துவிட்டது.
பத்திரிகைகளில் வாசகர்களுக்கு சில கருத்துகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது கார்ட்டூன்தான். அதே பணியைத்தான் ஜிப்லியும் இப்போது செய்கிறது. ஜிப்லி என்ற சொல் இத்தாலிய வார்த்தையாகும். இதன் பொருள் 'வெப்பமான பாலைவன காற்று' என்பதாகும். இரண்டாவது உலகப்போரின் போது இத்தாலியர்கள் ஒரு விமானத்துக்கு ஜிப்லி என்ற பெயரை வைத்து இருந்தனர். அதே பெயரை ஜப்பானில், தான் தொடங்கிய ஸ்டூடியோவுக்கு ஹயாவோ மியாசாகி என்பவர் சூட்டினார். அனிமேஷன் உலகில் புதிய காற்று வீச விரும்புகிறோம் என்பதற்காக இந்த பெயரை 1985-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஸ்டூடியோவுக்கு வைத்தனர்.
இந்த ஸ்டூடியோவில் பல பிரபலமான கார்ட்டூன் படங்கள் ஜிப்லி படங்களாக வெளியிடப்பட்டது. அன்று ஜிப்லி படங்களை ஜப்பானிய ஸ்டூடியோ வெளியிட்ட நிலை மாறி, செல்போனை கையில் வைத்து இருக்கும் யாரும் ஜிப்லி படத்தை உருவாக்கும் நிலைமை வந்துவிட்டது. ஜிப்லி ஸ்டைலில் படம் என்பது ஒருவருடைய வாழ்க்கை சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களை கார்ட்டூன் படங்களாகவும் அனிமேஷனாகவும் மாற்றுவதாகும். கடந்த ஒரு மாதமாக இணையதளத்தில் ஜிப்லி படங்களே அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. அரசியல்வாதிகள் இதை உருவாக்கி தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி எனது அரசாங்கம் என்ற தலைப்பிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் என்ற தனது திட்டத்தையும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை தான் சந்தித்தது போன்ற படங்களையும் ஜிப்லி படங்களாக தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பொதுமக்கள் இதையெல்லாம் தாண்டி சென்றுவிட்டனர். தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் அதாவது சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்றவை மூலம் இணையதளமே முடங்கிப்போகும் அளவுக்கு ஜிப்லி ஸ்டைலில் தங்களை பார்த்து மகிழும் பயன்பாடு அதிகரித்துவிட்டது.