மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்த மு.க.ஸ்டாலின்: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

6 hours ago 2

மதுரை,

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் ஒரு கின்னஸ் சாதனை படைத்து வருவதை நாம் நன்றாக அறிவோம். இன்றைக்கு அதனுடைய தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்படியானால் மக்களுடன் முதல்வர் என்று ஏற்கனவே தொடங்கிய அந்த திட்டம் காலாவதி ஆகி விட்டதா? அல்லது மக்களுடைய கவனத்தை பெறவில்லையா? நீங்கள் மக்களை தேடி அரசு என்று சொல்லுகிறீர்கள். இந்த நான்காண்டுகளில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று இன்றைக்கு மக்கள் கேள்வியாக கேட்கிறார்கள்.

அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், திட்டங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங்பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் மக்கள் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகள். தங்கள் ஆட்சி மக்களிடம் நம்பிக்கை இழந்ததன் காரணமாக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அதிகாரிகளை முன்னிறுத்தி அவர்களுடைய முகமூடியை பயன்படுத்தி இந்த தகவல்களை எல்லாம் வெளியே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

பொதுவாக செய்தி துறை வாயிலாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இப்போது மக்கள் நன்மதிப்பை பெற்ற 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து செய்திகளை மக்களிடத்திலே கொண்டு போய் சேர்த்தால் ஒருவேளை மக்களிடம் வரவேற்பு ஏற்படும் என்று நினைத்தால் அது எடுபடாது. ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள். துறையினுடைய செயலாளர்களே வெளியிடலாமே? எதற்கு இந்த நான்கு அதிகாரிகளை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள்? நீங்கள் எதை சொன்னாலும் இனிமேல் இந்த மக்கள் நம்ப தயாராக இல்லை.

மக்களின் நம்பிக்கையில் தோல்வி அடைந்த இந்த அரசு, அந்த தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு அதிகாரிகள் முகவரியை பயன்படுத்தி உண்மைக்கு மாறாக பொய்யான செய்திகளை பரப்பி, அரசுக்கு முட்டுக் கொடுக்க நினைக்கிறது.இது குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு இதுவரை ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார். அரசின் தோல்வியை மறைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும். அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கின்ற திட்டங்கள் அறிவிப்பு மக்களுக்கு எந்த பயனும் தராது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

 

Read Entire Article