
சிம்லா,
இமாசல பிரதேசம் இயற்கை எழில் கொஞ்சும் மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்த வடமாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எனினும், பருவமழை காலங்களில் அதிகளவில் மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. நடப்பு ஆண்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் தென்மேற்கு முன்பே பருவமழை பெய்தது. தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இமாசல பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இதேபோன்று மின்சாரம் தாக்குதலும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 61 பேர் மழை தொடர்பான சம்பவங்களிலும், 44 பேர் சாலை விபத்துகளிலும் பலியாகி உள்ளனர். மண்டி (17), காங்ரா (14) மற்றும் குல்லு (4) உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இதேபோன்று, மொத்தம் ரூ.78 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. இதில், மண்டி மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவற்றில் விவசாயம் மற்றும் தோட்டம் சார்ந்த பயிர்களின் பாதிப்பும், கால்நடைகளின் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.