மக்களுடன் முதல்வர் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு $2.70 கோடி மானியத்துடன் கடன்

3 months ago 6

*விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை

பட்டுக்கோட்டை : மக்களுடன் முதல்வர் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 2 கோடியே 70 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது கட்டமாக 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது.

முதலில் பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம்.எல்.ஏஅசோக்குமார், தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். முகாமில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கி பேசினார்.‌

அதனைத்தொடர்ந்து கார்காவயல் ஊராட்சியில் பிவிஎன் திருமண மண்டபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில்‌ அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட துவரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சியில் சிவக்கொல்லை கிராம சேவை மையத்திலும், அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூட்டத்திலும் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் நேற்று 5 ஊராட்சிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் 42 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 244 மகளிர்களுக்கு ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன் உதவிக்கான ஆணைகளை அமைச்சர் கோவி.செழியன் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும். பல்வேறு திட்டங்களின் மூலம் அனைத்துதுறை அரசு அலுவலர்களும் மக்களைத் தேடி மக்களது குறைகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் இத்திட்டங்களை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விடுபட்டு போனவர்களில் 10,000 பேருக்கு ரூபாய் ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை காத்திருந்த சகோதரிகளுக்கு வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த தகவலை தலைமை செயலகம் மூலமும், வருவாய்த்துறை மூலமும் சொன்னார்கள்.

அதேபோல் நேற்றுமுன்தினம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறிஸ்தவராக இவர்கள் வாங்கிய கல்விக்கடன் சுமார் 49 கோடி ரத்து செய்த ஒரே முதல்வர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர்.

எனவே பார்த்து பார்த்து மக்களுக்கு செய்துவருகிற இந்த பொன்னான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சரை, அற்புதமான துணை முதலமைச்சரை தொடர்ந்து நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சி முகாமில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்கென்னடி, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு $2.70 கோடி மானியத்துடன் கடன் appeared first on Dinakaran.

Read Entire Article