நன்றி குங்குமம் தோழி
‘‘மக்களுக்காக களத்தில் நின்று அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்கும் ஊடகமாக இருப்பதே எனக்கு பெரு மகிழ்ச்சி’’ என்கிறார் மகாலட்சுமி. விருதுநகர் மாவட்ட CITU அமைப்பில் முழுநேர ஊழியராக பணியாற்றி வரும் இவர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களிடையே பணியாற்றி வருகிறார். குறிப்பாக விபத்துகளில் பாதிக்கப்படும் பட்டாசு தொழிலாளர்களுக்கு இழப்பீடு வாங்கித் தருவது, பென்ஷன் வாங்கித் தருவது, பெண்ணுரிமை சார்ந்த போராட்டங்களில் கலந்து கொள்வது என முழு நேர செயற்பாட்டாளராக இருக்கிறார். ஆசிரியராக தொடர்ந்த பயணத்தில் இன்று போராளியாக உருமாறி இருக்கிறார்.
‘‘எனக்கு சொந்த ஊரு சிவகாசி. 12ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அதன் பிறகு படிக்கல. டெய்லரிங் கத்துக்கிட்டு வீட்டிலேயே வேலை செய்திட்டு இருந்தேன். என்னோட வீட்டுக்குப் பின்னாடி பள்ளி ஒன்று இருந்தது. அது ஒரு சிறப்பு பள்ளி. குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு அந்தப் பள்ளியில் படிப்பு சொல்லித் தராங்க. CITU தொழிற்சங்கம் அந்த நாட்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்தது.
இது போன்ற சிறப்பு பள்ளிகள் தொழிற்சங்கத்தின் கீழும் நடத்தப்பட்டது. CITU அமைப்பிற்கு கீழ் நாமக்கல், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிவகாசி புதுதெரு, லட்சுமியாபுரம், விஜயகரசல் குளம் என மூன்று பள்ளிகள் இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் தொழிற்சங்கங்களின் கண்காணிப்பில் இந்தப் பள்ளிகள் இயங்கும்.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வந்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகள் இயங்கும். குழந்தைகளும் ஆர்வமாக படித்து வந்தார்கள் ஆனால் வகுப்பாசிரியர் இல்லாத காரணத்தால் அவர்களால் அந்தப் பள்ளியினை தொடர்ந்து இயக்க முடியவில்லை. குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை அறிந்து நான் வகுப்பு எடுக்கிறேன் என்று தொழிற்சங்கத்திடம் கேட்டேன். அவங்க சம்மதிக்க, நான் அந்த மாணவர்களுக்கு ஆசிரியராக மாறினேன். அவர்களுக்கு பாடம் எடுக்க தொடங்கினேன்.
மாலை நேரங்களில் நான் வகுப்புகள் எடுப்பேன். அவர்களுக்கு நல்ல முறையில் வகுப்பு எடுக்க வேண்டும் என்பதற்காக நான் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். மேலும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லித்தர வேண்டும் என்று அதற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டேன். இதே காலகட்டத்தில்தான் இந்த சிறப்பு பள்ளிகள் எல்லாம் NCLP என்ற பெயரில் தரம் உயர்த்தப்பட்டது’’ என்றவர், குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமில்லாமல் அவரின் வாழ்க்கை பாதையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பகிர்ந்தார்.
‘‘இந்தப் பள்ளி நன்றாக இயங்குவதைப் பார்த்து பக்கத்து ஊர்களில் இருந்தும் குழந்தைகள் சேரத் துவங்கினார்கள். பெளர்ணமி நாள் ஒன்றில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் ‘நிலா குழந்தைகள்’ என்ற பெயரில் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எங்களின் குழந்தைகள் பங்கு பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பாட்டு, நடனம், கராத்தே, ஜிம்னாஸ்டிக் போன்றவற்றை சொல்லிக் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு அதில் பங்கு பெற அழைப்பு வரவில்லை.
உடனே நாங்க ஊர் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி பெற்று கலந்து கொண்டோம். குழந்தைகளும் ஆர்வமாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்த, எங்க பள்ளி முதல் இடத்தைப் பிடித்தது. அதை பார்த்த பஞ்சாயத்து தலைவர் பள்ளிக்கு தேவையானவற்றை செய்து தருவதாக கூறி அதை செய்தும் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி சார்ந்து நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வெற்றிகளை குவித்து வந்தோம்.
2003ல் திருநெல்வேலியில் நடைபெற்ற CITU மாநாட்டில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் அவர்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து எங்களின் பள்ளி மாணவர்களுக்கு மற்ற மாவட்டங்களில் நடை பெறும் கலை நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் தங்களின் தனித்திறன்களிலும் வெற்றி வாகை சூட ஆரம்பித்தார்கள். இந்தக் காலக்கட்டத்தில் நான் விஜயகரசல் குளம் பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அரசு பங்களிப்பில் இயங்கும் இந்தப் பள்ளியில் பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் படித்து வந்தனர்.
அவர்களின் நிலையை பார்த்து அவர்களுக்காக முழுநேர பணியில் ஈடுபட விரும்பினேன். ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, CITUவில் முழுநேர ஊழியராக இணைந்தேன். பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு பென்ஷன் ஏற்பாடு செய்து கொடுத்தோம். மேலும் விபத்தில் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு என அனைத்தும் போராடித்தான் வாங்கிக் கொடுத்தோம். மேலும் அமைப்பில் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தேன்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில்வே துறை அதிகாரி ஒருவர் உடன் வேலை பார்க்கும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக செய்தி வந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்தி அந்த நபருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தோம். பெண்களுக்கான உரிமைகளுக்காகவும், அவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை எதிர்த்தும் அவர்களுக்கு குரல் கொடுப்பது ஒருவித மனநிறைவைத் தருகிறது. மேலும் மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்’’ என்கிறார் மகாலட்சுமி.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post மக்களுக்காக களத்தில் நிற்பதே மகிழ்ச்சிதான்! appeared first on Dinakaran.