சென்னை: சென்னை புளியந்தோப்பு மன்னார் சாமி தெருவில் ரூ.32 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக அமைப்பு துணைச் செயலாளருமான தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர் சாமி கண்ணு, மாமன்ற உறுப்பினர் அம்பேத் வளவன், ராஜ் முஹம்மது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முதல்வர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்துக்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழிசை என்ன செய்து விடுவார், அவரே துப்பாக்கியை ஏந்துவாரா, தமிழ்நாடு இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி. தீவிரவாதத்திற்கு எப்பொழுதும் தமிழக முதல்வர் துணை போக மாட்டார், தீவிரவாதத்தை எப்போதும் இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க முற்படுகிறார்கள். அதற்கு துளியும் தமிழகம் இடம் தராது. சகோதர சகோதரிகளாக இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒன்றாக உள்ளனர். இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்களிடையே பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காய நினைத்தால் குளிர் ஜுரம்தான் வரும்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி appeared first on Dinakaran.