21 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொத்து பட்டியல் வெளியீடு ரூ.120 கோடி மதிப்பு சொத்துடன் கே.வி.விசுவநாதன் முதலிடம்

4 hours ago 3

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற முழு நீதிமன்றக் கூட்டத்தில் 30 நீதிபதிகள் கலந்து கொண்டனர். அப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை இணையதளத்தில் பகிரங்கமாக அறிவிக்க ஒப்பு கொண்டனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மொத்தமுள்ள 33 நீதிபதிகளில் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் சொத்து விவரங்களில், தெற்கு டெல்லியில் மூன்று படுக்கையறைகள் கொண்ட டி.டி.ஏ குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் 2,446 சதுர அடி பரப்பளவில் நான்கு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மேலும் ரூ.55.75 லட்சம் மதிப்பிலான வைப்பு நிதி மற்றும் வங்கிக் கணக்குகள், ரூ.1.06 கோடி மதிப்பிலான பொது வைப்பு நிதி ஆகியவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி கே.வி. விசுவநாதன், ரூ.120 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் பிரபல வக்கீலாக இருந்த இவர், அந்த காலகட்டத்தில் அதிகம் சம்பாதித்துள்ளார். இவருக்கு டெல்லியிலும், கோவையிலும் சொத்துகள் உள்ளது. புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி பி.ஆர். கவாய்க்கு வங்கியில் ரூ.19.63 லட்சத்திற்கும் அதிகமான சொத்துகள், மகாராஷ்டிராவின் அமராவதியில் அவரது இறந்த தந்தையிடமிருந்து பெறப்பட்ட வீடு, மும்பையின் பாந்த்ரா மற்றும் டெல்லியின் டிபென்ஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அமராவதி மற்றும் நாக்பூரில் விவசாய நிலங்கள் உள்ளன.

மேலும் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் நகைகள் உட்பட அசையும் சொத்துக்களைக் கொண்டுள்ளார், அவரது மனைவிக்கு ரூ.29.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.61,320 ரொக்க வைப்புத்தொகை உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி சூர்யா காந்த், சண்டிகரில் உள்ள செக்டார் 10 இல் ஒரு வீடு, பஞ்ச்குலாவில் 13 ஏக்கர் விவசாய நிலம், குருகிராமில் 300 சதுர கெஜம் நிலம் மற்றும் பிற அசையா சொத்துகளைக் கொண்டுள்ளார். அவரிடம் ரூ.4.11 கோடி மதிப்புள்ள நிலையான வைப்புத்தொகை, 100 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் உள்ளன.

The post 21 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொத்து பட்டியல் வெளியீடு ரூ.120 கோடி மதிப்பு சொத்துடன் கே.வி.விசுவநாதன் முதலிடம் appeared first on Dinakaran.

Read Entire Article