பண்டாசுர வதோத்யுக்த ஸக்தி ஸேனா ஸமன்விதா
நாம் இதற்கு முன்னால் சொல்லப்பட்ட வரிசைக் கிரமத்தில் பார்த்தோம் என்றால் அம்பிகையினுடைய ஸ்தானம், பிரபாவம், வைபவம் என்றெல்லாம் வசின்யாதி வாக் தேவதைகள் சொல்லிக் கொண்டே வந்தார்கள். சென்ற நாமாவான தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா… என்பதில் தேவ ரிஷிகளால் சேவிக்கப்படுகிறவள். இங்கு தேவ ரிஷிகள் சேவிக்கிறார்கள் எனில் அதற்கு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்ன? முதல் விஷயமாக தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையை சேவிக்கிறார்கள் எனில் அதற்கு எந்தக் காரணமுமே தேவையில்லை. நமக்கும் அப்படித்தான்… அம்பிகையை வணங்குவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. ஆனால், காரணம் தேவையில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும்… சாதாரண நிலையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு ஏதாவது ஒரு காரணம் தேவைப்படும். அம்பிகையை வணங்குவது என்பது ஆத்ம சொரூபத்தை உணர்வது. அதேசமயம் அம்பிகையை வணங்குவதற்கு ஆத்ம சொரூபத்தை உணர்வதற்கு காரணம் தேவையில்லை. அது காரிய காரணங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், நாம் சரீர அவஸ்தையில் சரீரத்திற்கும் மனதிற்கும் கட்டுப்பட்டிருக்கும்போது, நாம் எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணம் எதிர்பார்ப்போம் அல்லவா… அப்போது காரணம் எதிர்பார்க்கும்போது தேவரிஷிகள் வந்து அம்பிகையை வணங்குவதற்கு என்ன காரணம் என்று ஒரு கேள்வி வரும். அப்போது என்ன காரணம் என்கிற கேள்வி வரும்போது, அதற்கான பதிலைத்தான் இந்த நாமாவிலுருந்து நாம் பார்க்கப் போகிறோம்.
என்ன பதில் கிடைக்க ஆரம்பிக்கிறதெனில், பண்டாசுரன் என்கிற அசுரனை அம்பாள் சம்ஹாரம் செய்ததனாலேயும், அப்படிப்பட்ட அசுரர்கள் வரும்போது அவர்களை சம்ஹாரம் செய்து தேவர்களையும் ரிஷிகளையும் காப்பாற்றுவதாலும் அம்பிகையை நாம் சேவிக்கிறோம். ஏற்கனவே இதற்கு முன்பெல்லாம் அப்படி அம்பிகை சம்ஹாரம் செய்திருக்கிறாள். இப்போது நம்மை நோக்கி எதுவந்தாலும் அம்பாள் சம்ஹாரம் செய்வாள். இனி நம்மை எது வந்தாலும் பண்டாசூரனோ அல்லது பண்டாசுரன் போல எவர் வந்தாலும் அம்பிகை சம்ஹாரம் செய்வாள். அப்போது நமக்கு காப்பாக இருந்து நம்மை தாக்க வரக்கூடிய எந்த கெட்ட விஷயத்தையும் சம்ஹாரம் செய்யக் கூடிய நிலையில் இருப்பதாலும், நமக்கு காப்பாக இருந்து நல்லது செய்யக்கூடிய நிலையிலிருப்பதாலும் அந்தத் தாயை நாம் வணங்குகிறோம். அப்போது இதுதான் வணக்கத்திற்குரிய காரணமாகும். இதற்கு முந்தைய நாமத்தில் அவள் வணங்கியதற்கான காரணம் நமக்கு இந்த நாமத்தில் தெரிகிறது.பண்டாசுர வதோத்யுக்த ஸக்தி ஸேனா ஸமன்விதா… அதாவது சக்தி சேனைகளோடு கூடி பண்டாசூரனை வதம் பண்ணுவதற்கு அவள்தயாராக இருக்கிறாள் என்பதுதான் இந்த நாமம். சக்தி சேனைகளோடு கூடி பண்டா சுரனை வதம் செய்தவள் என்றும் பொருள். அதற்காக நாம் அவளை வணங்குகிறோம். அது அப்போது இந்த பண்டாசுரன் யார்? நம் புராணங்கள் காரண, காரியங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை கதைகளாக சொல்கின்றது. கதைகளுக்குள் சொல்வதுதான் வழக்கம்.
அப்படித்தான் பண்டாசுரனுடைய விஷயமும் புராணமாக ஒரு கதையாகத்தான் வருகிறது. லலிதோபாக்கியானத்தில் பிரமாண்ட புராணத்தில் பண்டாசுரனுடைய கதை வருகிறது. இப்போது இந்த நாமாவான பண்டாசுர வதோத்யுக்த சக்தி சேனா சமன்விதா என்று சொல்லும்போது, இந்த சஹஸ்ரநாமத்தில் இந்த பண்டாசுரன் என்கிற பேரையே நாம் கேள்விப் படுகிறோம். லலிதோபாக்கியானத்தில் இருக்கலாம். ஆனால், லலிதா சஹஸ்ரநாமத்தில் இந்த நாமாவில்தான் முதலில் பண்டாசுரன் என்கிற பெயரே வருகின்றது. அப்போது இந்த பண்டாசுரன் யார்? என்ற கேள்விக்கு புராணத்தில் நாம் விளக்கத்தை பார்க்கலாம். இது பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த விளக்கம்தான். மன்மதனை சிவபெருமான் எரிக்கிறார். அவன் எரிந்துபோய் விடுகிறான். ரதி தேவி அழுதவுடன் மன்மதன் ரதி தேவியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி சூட்சுமமாக அணங்கனாக ரதி தேவிக்காக சிவன் எழுப்பிக் கொடுத்து விடுகிறார். இப்போது மன்மதனை அணங்கனாக சூட்சுமமாக எழுப்பிக் கொடுத்தால் கூட, ஸ்தூலமான அந்த மன்மதனுடைய சாம்பல் இருக்கிறதல்லாவா… இதற்கு முந்தைய நாமத்தில் நாம் பார்த்திருக்கிறோம். கர்ம மன்மதனை பகவான் எரித்து விட்டார். ஞான மன்மதனை எழுப்பிக் கொடுத்துவிட்டார் என்று பார்த்தோம். இப்போது ஞான மன்மதனை எழுப்பியதற்கு பிறகு, அந்த கர்ம சரீரம், அந்த சாம்பல் இருக்கிறதல்லவா… அந்த சாம்பலெல்லாம் திரண்டு உருவமாகி ஒருவன் வருகிறான். அவனுக்குத்தான் பண்டன் என்று பெயர். ஏன் அவனுக்கு பண்டன் என்று பெயர். அவன் வரும்போது அவனுக்கு பண்டன் என்று பெயர் கிடையாது. அவன் அந்த சாம்பலிலிருந்து திரண்டு உருவம் பெற்று வருகிறான். அவன் வந்து சிவபெருமானை ஸ்துதி செய்கிறான்.
சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார். இவன் சிவபெருமானை ஸ்துதி செய்வதைப் பார்த்து, பிரம்மா மகிழ்ந்து பண்ட… பண்ட… என்கிறார். பண்ட என்றால் நல்லது என்று அர்த்தம். அதனால் முதன்முதலாக பண்ட… பண்ட… என்று பிரம்மா சொன்னதால் அவனுக்கு பண்டாசுரன் என்று பெயர். இப்போது இதில் என்னவொரு பெரிய விஷயமெனில், அவனுடைய பெயரே விசித்திரமானது. ஏனெனில், பண்ட என்றால் நல்லது. ஆனால், அவன் ஒரு அசுரன். இதை அப்படியே மொழி பெயர்த்தால் நல்ல அசுரன் என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும். பண்டாசுரன் என்றால் நல்ல அசுரன் என்று பொருள். இப்போது நல்ல அசுரன் என்றால், ஒரு உதாரணத்தோடு பார்க்கலாமா?ஏதோ ஒன்றை நாம் உண்ணுகிறோம். அது மிகவும் காரமாக இருக்கிறது. அது மிகுந்த உப்பாக இருக்கிறது. அந்தக் காரமும் உப்பும் நமக்கு பிடிக்கவில்லை அல்லது சரியாக வரவில்லை. ஆனால், நாம் அதைக் கேட்டால் நல்ல காரமாக இருக்கிறது என்றுதான் சொல்வோம். நல்ல காரமென்றால் அந்த இடத்தில் காரம் நல்லது என்று அர்த்தம் கிடையாது. யாராவது எப்படியிருக்கிறது என்று கேட்டால் நல்ல காரமாக இருக்கு என்று சொல்வோம். நல்ல காரமெனில் அந்த இடத்தில் காரம் நல்லது என்று அர்த்தம் கிடையாது. காரம் அதிகமாக இருப்பதைத்தான் நல்ல காரமென்று சொல்கிறோம். இவனை ஏன் நல்ல அசுரன் என்று ஏன் சொல்கிறோமெனில், இவன் அசுரர்களில் நல்லவனென்று அர்த்தம் கிடையாது. இருப்பதிலேயே நல்ல அசுரத் தன்மை இருக்கிறது. அதனால் நல்ல அசுரன். ரொம்ப அசுரத்தன்மை இருப்பதனால் அவனுக்கு பண்டாசுரன் என்று பெயர். பிரம்மா பண்ட என்று சொன்னது ஒரு காரணம். ஆனாலும், நல்ல அசுரன் என்றால் அவன் முழுமையான அசுரத்தன்மையிலிருக்கிறான். அவனிடத்தில் அசுரத்தன்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
(சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா
The post மகோன்னத சக்தியை அளிக்கும் அம்பிகை appeared first on Dinakaran.