'மகாவிகாஸ் அகாடி கூட்டணி வென்றால் மராட்டிய மாநிலம் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக மாறிவிடும்' - அமித்ஷா

1 week ago 3

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றால் மராட்டிய மாநிலம் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக மாறிவிடும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜல்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"மராட்டிய தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் மராட்டிய மாநிலம் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக மாறிவிடும். அவர்கள் மராட்டிய மாநிலத்தின் கருவூலத்தில் இருந்து நிதி அனைத்தையும் எடுத்து டெல்லிக்கு அனுப்பி விடுவார்கள். அதே சமயம், மகாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தால், மோடி அரசாங்கம் மராட்டிய மாநிலத்தின் மாபெரும் வளர்ச்சியை உறுதி செய்யும்.

காங்கிரஸ் கட்சி போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது. சமீபத்தில் ராகுல் காந்தி தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு சுற்றி வந்தார். நாடாளுமன்றத்தில் உறுதிமொழி ஏற்கும்போதும் அந்த புத்தகத்தை வைத்திருந்தார். ஆனால், பத்திரிக்கையாளர்கள் சிலர் அந்த புத்தகத்தை வாங்கி பார்த்தபோது, அதில் வெறும் வெற்று காகிதங்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

போலியான அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை காட்டி மக்களின் நம்பிக்கையை உடைத்தது மட்டுமின்றி, அம்பேத்கரையும் ராகுல் காந்தி இழுவுபடுத்தியுள்ளார். உண்மையில் ராகுல் காந்தி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வாசித்திருக்கவே மாட்டார்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Read Entire Article