
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யார் இந்த ரகுபதி? ஜெயலலிதா கைகாட்டவில்லை என்றால், அ.தி.மு.க. தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்?. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கம் அமோகமாக உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமே இல்லை என்று பச்சைப்பொய் பேசியவர் தானே இந்த ரகுபதி?.
கோடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்? 4 ஆண்டுகளாக கோடநாடு வழக்கை ஏன் விசாரித்து முடிக்கவில்லை, ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?.
அவர்கள் முயற்சி எடுத்தும் வராத நிதி, எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்?. ரகுபதி உள்ளிட்டவர்கள் வேண்டுமானால் சோதனைகளுக்கு பயப்படலாம். மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலைச் செய்யும், எடப்பாடி பழனிசாமிக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் யாரும் ஒருபோதும் எந்த சோதனைக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.