தானே: மகாராஷ்டிராவில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் சப்ளையை கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி துண்டித்தது. மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சிக்கு மொத்தம் ரூ.4.41 கோடி குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் 2024-25ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மட்டும் ரூ.1.17 கோடி. குடிநீர் கட்டண பாக்கியை செலுத்துமாறு கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி பலமுறை கல்யாண் ரயில் நிலையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கட்டண பாக்கி செலுத்தப்படவில்லை.
இதனை தொடர்ந்து கல்யாண் ரயில் நிலையத்துக்கான குடிநீர் சப்ளையை மாநகராட்சியின் உதவி கமிஷனர் சச்சின் தம்கேடே கடந்த சனிக்கிழமை ரத்து செய்தார். ஒரு நாளைக்கு இந்த சப்ளை துண்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்யாண் ரயில் நிலைய அதிகாரிகள் கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 2024-25ம் ஆண்டுக்கான கட்டண பாக்கி ரூ.1.17 கோடியை உடனடியாக செலுத்துவதாகவும், பாக்கி தொகையை பின்னர் செலுத்துவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து ரயில் நிலையத்துக்கு குடிநீர் சப்ளையை தொடருமாறு மாநகராட்சி கமிஷனர் இந்து ராணி ஜாக்கர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை மாலை ரயில் நிலையத்துக்கு மீண்டும் குடிநீர் சப்ளை தொடர்ந்தது. பாக்கி தொகையை வசூலிப்பது பற்றி ரயில்வே அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கமிஷனர் கூறினார்.
The post மகாராஷ்டிராவில் ரயில் நிலைய குடிநீர் இணைப்பு கட்டண பாக்கிக்காக துண்டிப்பு appeared first on Dinakaran.