அமராவதி: மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட 5 மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 80 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான புள்ளி விபரங்களின்படி மாநிலத்தின் குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் மழை பற்றாக்குறை, பயிர் சேதம், கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 2020 ஜனவரி முதல் 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அமராவதியில் 5,395 பேர், அகோலாவில் 3,123 பேர், புல்தானாவில் 4,442 பேர், வாஷிமில் 2,048 பேர், யவத்மாலில் 6,211 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த சம்பவங்களில் மொத்தம் 9,970 வழக்குகள் தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் பெற தகுதியுடையவை; மேலும் 9,740 வழக்குகளுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10,963 தற்கொலை வழக்குகள் நிவாரணம் பெற தகுதியற்றவை என்றும், 319 வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மகாராஷ்டிராவில் 5 மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 80 விவசாயிகள் தற்கொலை appeared first on Dinakaran.