மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

1 month ago 6

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்றுள்ளார். இன்று காலை நாண்டெட் விமான நிலையத்திற்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வாஷிம் பகுதிக்கு சென்றடைந்தார். அங்குள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்த பின்னர் சந்த் சேவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராமாராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து பஞ்சாரா சமூகத்தினரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பஞ்சாரா விராசத்த் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.3.45 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். மேலும் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

அதோடு 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மொத்த வருவாய் சுமார் 1,300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகள் தொடர்பான ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேலும் மராட்டிய மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட 5 சோலார் பூங்காக்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மராட்டிய அரசின் பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளை பிரதமர் மோடி கவுரவித்தார்.

The post மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Read Entire Article