வாஷிங்டன்: அமெரிக்காவின் பரஸ்பர கட்டணங்களை தவிர்ப்பதற்காக அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘‘அமெரிக்காவுடனான ஆசிய வர்த்தக கூட்டாளிகளுடான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகின்றது. துணை அதிபர் வான்ஸ் கடந்த வாரம் இந்தியா சென்றிருந்தார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கணிசமான முன்னேற்றம் குறித்து அவர் பேசினார்.
கொரிய குடியரசு உடன் பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடந்துள்ளன. மேலும் ஜப்பானுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் அதிக தீவிரமான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியதை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.பல நாடுகள் முன்வந்து சில நல்ல திட்டங்களை முன்வைத்துள்ளன. அவற்றை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம். நாங்கள் கையெழுத்திடும் முதல் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்” என்றார்.
The post பரஸ்பர கட்டணங்களை தவிர்க்க இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.