புதுடெல்லி: ‘‘வரும் 21ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கல்வியை நவீனமயமாக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளது’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடந்த யுகம் புத்தாக்க மாநாட்டில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ந்த இந்தியாவுக்கான எதிர்கால தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை யுகம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவின் புத்தாக்கக் கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் முயற்சிகள் மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் அதன் பங்களிப்பு ஆகியவை இந்த மாநாடு மூலம் வேகம் பெறும். எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் அதன் இளைஞர்களை சார்ந்துள்ளது. இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதில் கல்வி முறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, 21ம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்குவதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
உலகளாவிய கல்வித் தரத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை இந்திய கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமல்லாமல், தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்ளும் வகையில் தயாராக உள்ளனர். பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் இந்தியாவின் இளம் தலைமுறையினர் மாற்றத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இளைஞர்களின் ஒருங்கிணைந்த திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்ப வலிமை ஆகியவை இந்தியாவை வெற்றியின் உச்சிக்கு இட்டுச் செல்லும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, யோசனைகளை செயல்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இடையேயான பயண காலத்தை சுருக்க வேண்டியது மிகவும் முக்கியம். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மேம்பட்ட பகுப்பாய்வு, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம் மற்றும் செயற்கை உயிரியல் ஆகிய துறைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கல்வியை நவீனமயமாக்க முயற்சி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.