சென்னை: மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் நயா பாரத் என்ற ஒரு நகைச்சுவை வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜ கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.
சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீதும், அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் மும்பை கார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, குணால் நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆளுங்கட்சி அமைச்சர்களால் மிரட்டப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய மகாராஷ்டிரா போலீசார் முடிவு செய்துள்ளனர். என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குணால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவர் மகாராஷ்டிராவில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடியாத நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர் விழுப்புரம் மாவட்டம் வானூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமீனில் முன்ஜாமீன் பெறலாம். இந்த மனு மீது மும்பை கார் போலீசார் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post மகாராஷ்டிரா துணை முதல்வர் மீது விமர்சனம் நகைச்சுவை நடிகருக்கு இடைக்கால முன்ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.