டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வணிகம்-இறக்குமதிகளுக்கு தடை, பாகிஸ்தான் நாட்டு கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை என அடுத்தடுத்து அதிரடிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதேபோல பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கும் முழு சுதந்திரத்தை ஒன்றிய அரசு அளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக கண்டபடி பாகிஸ்தான் பேசி வருகிறது. சிந்து நதியில் நீரை நிறுத்தினால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ அடாவடியாக பேசினார். அதேபோல, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்ற ரீதியிலும் மிரட்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் இந்த மிரட்டல்களை பொருட்படுத்தாத இந்தியா, பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் தீர்க்கமாக உள்ளது. தொடர்ச்சியாக பிரதமர் மோடி கடந்த இரு தினங்களாக விமானப்படை தளபதி, கடற்படை தளபதியை சந்தித்து பேசினார். பாதுகாப்புத்துறை செயலரையும் மோடி சந்தித்து இருக்கிறார்.
இந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர்,
பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவர். இந்தியா – ரஷ்யா உறவை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் பேசி வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் அறிவித்தார். இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
The post தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு: ரஷ்ய அதிபர் புதின் appeared first on Dinakaran.