மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை; காலை 11 மணிக்கு முடிவு தெரியும்

1 month ago 3

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கப்போவது யார்? ஆளும் கட்சியே தக்க வைக்குமா? எதிர்க்கட்சிகள் கைப்பற்றுமா என்பது இன்று காலை 11 மணிக்கு தெரியும். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக இம்முறை 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பாஜ, ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. மறுபுறம் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்சியை கைப்பற்றுவது மகாவிகாஸ் அகாடிக்கு முக்கியமானதாகும். கடந்த 2022ல் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஷிண்டேவின் சூழ்ச்சியால் கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டுமென மகா விகாஸ் அகாடி கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில், 2 கட்சிகளை உடைத்து நிறுவிய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென மகாயுதி கூட்டணியும் போராடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை, அனைத்தும் ஆளும் மகாயுதி கூட்டணிக்கே சாதகமாக இருந்தன.

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக கடந்த 20ம் தேதி 38 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றன. முதற்கட்ட தேர்தலில் 64.85% வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 67.59% வாக்குகளும் பதிவாகி இருந்தன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. காலை 11 மணி அளவில் இரு மாநிலங்களிலும் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.

* வயநாடு தொகுதி எம்பி ஆவாரா பிரியங்காகாந்தி?
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் காலியாக இருந்த வயநாடு, நந்தண்ட் மக்களவை தொகுதிகள் மற்றும் 48 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சிக்கிம் மாநிலத்தில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 46 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்த இடங்களிலும் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. குறிப்பாக வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த பிரியங்கா காந்தியின் தேர்தல் முடிவு பற்றி நாடே எதிர்பார்த்து உள்ளது.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை; காலை 11 மணிக்கு முடிவு தெரியும் appeared first on Dinakaran.

Read Entire Article