மகாகும்பமேளாவில் அடுத்தவாரம் ராகுல், பிரியங்கா புனித நீராடுகிறார்கள்: உபி காங்கிரஸ் ஏற்பாடு

1 week ago 3

லக்னோ: மகாகும்பமேளாவில் ராகுல், பிரியங்கா கலந்து கொண்டு அடுத்தவாரம் புனித நீராட உள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை நடைபெற்ற மத, கலாசார அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள்தொகையைவிட இதுவே மிக அதிகமாகும். மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் பத்து நாட்களுக்கும் மேல் உள்ள நிலையில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பயணிகளும் கும்பமேளாவுக்கு சென்று கலந்து கொள்கின்றனர்.

நேற்று கோவா கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வர் பிரமோத் சவாந்த், அமைச்சர்கள் புனித நீராடினார்கள். அதே போல் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயலும் புனித நீராடினார். இந்நிலையில் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடுத்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடுவார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கும்பமேளாவும், பிரயாக்ராஜும் (அலகாபாத்) நேரு குடும்பத்திற்கு புதிதல்ல.

அவர்களின் பூர்வீக இடமாகும். அவர்களின் மூதாதையர் வீடுகள் இங்கு அமைந்துள்ளன. ஆனந்த் பவன் மற்றும் ஸ்வராஜ் பவன் இன்னும் உள்ளன. திரிவேணி சங்கமும் அவர்களுக்கு புதிதல்ல. ராகுலுடன் அவரது சகோதரியும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள்’ என்று கூறினார். கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ம் தேதி மகாசிவராத்திரி அன்று நிறைவடைகிறது.

* மகாகும்பமேளா தேதியை நீட்டிக்க வேண்டும்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’எனக்கு கிடைத்த தகவலின்படி மொத்தம் 60 கோடி பேர் மகா கும்பமேளாவில் இதுவரை புனித நீராடியிருக்கிறார்கள். 65, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பலர் மகா கும்பமேளாவில் நீராட முடியாமல் தவித்து வருகிறார்கள். பிரயாக்ராஜில் வசிப்பவர்கள் குளிக்க கூட முடியவில்லை. எனவே மகாகும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. காவல்துறை மிகப்பெரிய தோல்வியைக் கண்டது என்றால், அது பிரயாக்ராஜில் தான்’ என்றார்.

* மகாகும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து
மகாகும்பமேளாவில் செக்டார் 17 பகுதியில் நேற்று மாலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 கூடாரங்கள் கருகின. மேலும் போர்வைகள், உணவுகள் நாசமானது. அந்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனே தீயை அணைத்தனர்.

10 பக்தர்கள் விபத்தில் பலி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் – மிர்ஸாபூர் நெடுஞ்சாலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராட காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரும், அந்த வழியாக வந்த பேருந்தும் திடீரென மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.

The post மகாகும்பமேளாவில் அடுத்தவாரம் ராகுல், பிரியங்கா புனித நீராடுகிறார்கள்: உபி காங்கிரஸ் ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article