லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 29ம் தேதி கும்பமேளா நடைபெறும் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பமேளா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கும்பமேளாவில் கலந்துகொள்ள நாளுக்குநாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.