புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளிலும் நேற்று உரையாற்றினார். இதனை தொடர்ந்து, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று தாக்கல் செய்து பேசினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், மத்திய பட்ஜெட் 2025-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பட்ஜெட்டை முன்னிட்டு நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டானது வடிவமைக்கப்பட்டு உள்ளது என கூறினார். இந்த பட்ஜெட் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று பேசும்போது, மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு அவருடைய அரசின் தொலைநோக்கு பார்வையை பற்றி சுட்டி காட்டினார். அதில், ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் பெண்களுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.
அவர் உரையை தொடங்கும் முன்பு, செல்வம் மற்றும் வளம் ஆகியவற்றிற்கான கடவுளான லட்சுமியை குறிப்பிட்டு பேசிய அவர், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன் என்றார்.