லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடுகின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் நாராயண் சேவா சன்ஸ்தான் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயலாற்றி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தலையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்து வருகிறது.
குறிப்பாக போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகளின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான செயற்கை உறுப்புகளை இந்த தொண்டு நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இந்த செயற்கை உறுப்புகளை தயாரிப்பதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை செய்வதற்காக சுமார் 50 டாக்டர்கள், பிசியோதெரபி நிபுணர்கள், செயற்கை உடல் உறுப்பு நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஒரு செயற்கை உடல் பாகத்தின் விலை சுமார் ரூ.90,000 என்று கூறப்படுகிறது. இந்த செயற்கை உறுப்புகளை மகா கும்பமேளாவிற்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாராயண் சேவா சன்ஸ்தான் தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்குகிறது.
இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளிடம் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 நாட்களுக்குள் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப்பட்டு பயனாளர்களின் உடலில் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.