![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35769362-stfkp.webp)
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.
வருகிற 29-ந்தேதி மவுனி அமாவாசை வருகிறது. இதற்காக திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வடக்கு ரெயில்வே, சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்து உள்ளது.
இதுபற்றி லக்னோ மண்டல ரெயில்வே மேலாளர் சத்யேந்திர மோகன் சர்மா கூறும்போது, மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும். கோடிக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள ஏதுவாக இந்த வசதியை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இவற்றில் லக்னோ நகருக்கு இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை சற்று அதிக அளவில் இருக்கும். தற்போது அயோத்தி, லக்னோ, ஜான்பூர் மற்றும் பனாரஸ் ஆகிய வழிகள் உள்பட குறுகிய தொலைவுகளுக்காக 11 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று வரை 10.80 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடலில் கலந்து கொண்டுள்ளனர். வருகிற நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.