![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38391244-9.webp)
பழனி,
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தற்போது தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை பிரதான பாதையாக உள்ளது. இதன் வழியே நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அதிகமாக சென்று வருகின்றனர். அதேபோல் பக்தர்கள் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவர வசதியாகவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் வேகமாகவும், அதே நேரத்தில் பழனி மலையின் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் ரோப் கார் சேவையை பெரும்பாலான பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து ரோப் கார் இயக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று பகல் முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டது. அதன்படி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்வப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ரோப்கார் சேவை இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாக பழனி மலைக்கோவிலுக்கு சென்றனர்.