![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38386929-7.webp)
நெல்லை,
தை மாதம் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாள் தைப்பூசம் ஆகும். இது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் முருகன் கோவில்களில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தி வழிபாடு நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரையாகவும் செல்வார்கள்.
அதன்படி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தைப்பூச நாளில் முருகனை வழிபடுவதற்காக பாத யாத்திரையாக புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
தைப்பூசத்துக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதாவது தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையம், அம்பை பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் நெல்லை வழியாக பாதயாத்திரையாக செல்கிறார்கள்.
சில பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் செல்கிறார்கள். அவர்களுடன் அலங்கரிக்கப்பட்ட முருகன் படத்துடன் கூடிய வாகனமும் செல்கிறது. நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம், தாமிரபரணி கரையில் மரநிழலில் ஓய்வு எடுத்தனர். அங்கு சமையல் செய்து சாப்பிட்டனர். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும் பக்தர்கள் புனித நீராடிவிட்டு சென்றனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை பகுதியை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டு செல்கிறார்கள்.