மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்

2 months ago 8

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க, தொடர்ந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில், நடந்து வரும் மகா கும்பமேளாவில் படகு சவாரி செய்ய பக்தர்கள் கூட்டம் இன்று அதிக அளவில் குவிந்ததாக கூறப்படுகிறது.

இந்த கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர். அதேபோல நடிகைகள் ஹேமமாலினி மற்றும் அனுபம் கெர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர் எனபது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article