மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் - ராகுல் காந்தி

1 week ago 3

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தியது ஆகியவைதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம்.

கும்பமேளா நிறைவடைய இன்னும் சில நாட்கள் இருக்கிறது. இன்னும் பல இடங்களில் புனித நீராடல்கள் நடைபெற இருக்கின்றன. விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article