மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

1 month ago 8

சென்னை,

திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தும் நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

காந்தி பிறந்தநாளில் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பின், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்று ஒரு மாநாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு மது ஒழிப்பு மாநாடு என்பது மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் கட்சியிலேயே ஆதரவு இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். இதுதான் அவர்களின் கொள்கை.

அதுமட்டுமல்ல, நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. திருமாவளவன் காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை குற்ற உணர்வு குறுகுறுக்கிறதோ என்னமோ, நமக்கு இருக்கிற கொள்கைக்கு நாம் காந்திக்கு எல்லாம் மாலை போடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை. அதனால், அது ஏன் அந்த வேறுபாட்டைக் காண்பிக்கிறார்கள். உண்மையிலேயே மது ஒழிப்பு என்றால் அது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கை. அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதற்காக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களோ என்று எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article