
பெங்களூரு,
5 அணிகள் இடையிலான 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 9-வது லீக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, உ.பி. வாரியர்சுடன் மோதியது.
இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (6 ரன்) சோபிக்காவிட்டாலும் டேனி வியாட்டும், எலிஸ் பெர்ரியும் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். வியாட் 57 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் (8 ரன்) உள்பட யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அதே சமயம் மறுபுறம் எலிஸ் பெர்ரியின் ரன்வேட்டை நீடித்ததால் ரன்ரேட் 8-க்கு குறையாமல் நகர்ந்தது.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது. நடப்பு தொடரில் 3-வது முறையாக அரைசதம் அடித்த பெர்ரி 90 ரன்களுடன் (56 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் யாரும் பெரிய இன்னிங்சை விளையாடவில்லை. கிரண் நவ்கிரே 24 ரன்களும், கேப்டன் தீப்தி ஷர்மா 25 ரன்களும், சுவேதா செராவத் 31 ரன்களும் எடுத்தனர். முந்தைய ஆட்டத்தில் மின்னல் வேகத்தில் அரைசதம் விளாசிய சினெலி ஹென்றி 8 ரன்னில் வீழ்ந்தார். அப்போது உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் தத்தளித்தது.
இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் சோபி எக்லெஸ்டோன் விசுவரூபம் எடுத்தார். 18-வது ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை அடித்தார். இதற்கிடையே சாய்மா தக்கோர் (14 ரன்) ரன்-அவுட் ஆனார். கடைசி ஓவரில் உ.பி. வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத சோபி எக்லெஸ்டோன் அடுத்த இரு பந்துகளை சிக்சருக்கு விரட்டினார். 4-வது பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். இதனால் 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் எக்லெஸ்டோன் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட கிராந்தி கவுல்டு அடிக்கவில்லை. பந்து விக்கெட் கீப்பரின் கைக்கு சென்றது. இருப்பினும் ஒரு ரன் எடுக்க முயற்சித்தனர். அதற்குள் எக்லெஸ்டோனை (33 ரன், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ரன்-அவுட் செய்தார்.
உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. நடப்பு தொடரில் சமனில் முடிந்த முதல் ஆட்டம் இதுவாகும். இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்தது. பின்னர் 9 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியால் 4 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் உ.பி. அணி திரில் வெற்றியை சுவைத்தது. பேட்டிங்கில் அசத்திய எக்ஸ்லெஸ்டோன் சூப்பர் ஓவரையும் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக பிரமாதமாக வீசி கதாநாயகியாக மின்னினார். உ.பி. வாரியர்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு 2-வது தோல்வியாகும்.
இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.