மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற அயர்லாந்து

6 months ago 23

சில்ஹெட்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லாரா டெலானி 35 ரன் எடுத்தார்.

வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்டர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக திலாரா அக்டர் மற்றும் சோபனா மோஸ்தரி ஆகியோர் களம் இறங்கினர். இதில் சோபனா மோஸ்தரி 1 ரன்னிலும், திலாரா அக்டர் 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து நிகர் சுல்தானா 6 ரன், தாஜ் நெஹர் 2 ரன், ஷோர்னா அக்டர் 20 ரன், ஷர்மின் அக்தர் 38 ரன், பஹிமா காதுன் 5 ரன், ஜஹானாரா ஆலம் 1 ரன், ஜன்னதுல் பெர்டஸ் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் வங்காளதேச அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் அயர்லாந்து அணி 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். அயர்லாந்தின் இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.

Read Entire Article