துபாய்,
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பெத் மூனி 40 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மேகன் ஷட் 3 விக்கெட் வீழ்த்தியன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேகன் ஷட் (46 விக்கெட்) படைத்துள்ளார்.
இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னம் இஸ்மாயில் (43 விக்கெட்), 3ம் இடத்தில் இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் (41 விக்கெட்), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (40 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.