
ராய்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் சாண்டோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி காட் பகுதியில், திருமணக் குழுவைச் சேர்ந்த சுமார் 70 பேரை ஏற்றிச் சென்ற பஸ் சங்கர்கர் பகுதியில் இருந்து அண்டை நாடான ஜார்க்கண்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 53 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பால்ராம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்கு இருந்து ஏழு பேர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மாற்றப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர்கள் பனேஷாரா திர்கி (18), மஹாந்தி குஜூர் (30) மற்றும் மமேஷ் படா (13) என அடையாளம் கண்டனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.