பெர்த்,
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுதர்லேண்ட் 110 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 299 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 215 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மந்தனா சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லி கார்ட்னெர் 5 விக்கெட்டுகளும், மேகன் ஸ்கட், அலனா கிங் தலா 2 விக்கெட்டுகளும், சுதர்லேண்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதை சுதர்லேண்ட் தட்டிச் சென்றார்.
இந்திய அணியின் முன்னணி வீராங்கனையான மந்தனா இந்த வருடம் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் 4 சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
மந்தனா இந்த வருடம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 1 என மொத்தம் 4 சதங்கள் அடித்துள்ளார்.